search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிமுதல்"

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநில எல்லையை ஒட்டியுள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில், கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இங்கு வரட்டுப்பள்ளம் அணை, செக் போஸ்ட் மற்றும் பர்கூர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாகன சோதனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட்டில் நிலை கண்காணிப்புக்குழு பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டம் ஹனூர் தொடவாத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த பாபு மகன் மாதேவன் (வயது 32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் அவர் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை மண்டல துணை வட்டாட்சியர் ராஜ சேகரிடம் ஒப்படைத்தனர்.

    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
    • வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ரெயிலில் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்து இருந்தனர்.
    • வணிகவரித்துறை அதிகாரிகள் அவரிகளிடம் நடத்திய விசாரணையில் உரிய பில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    மதுரை:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை சோதனைகள் தீவிரமடைந்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரெயில் மூலமாக பணம் மற்றும் தங்கம், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்கும் வகையில் ரெயில்வே காவல்துறையினரும் சந்தேகத்துக்குரிய வகையில் ரெயில் நிலையத்தில் நிற்பவர்கள், ரெயிலில் பயணம் செய்பவர்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லக்கூடிய பயணிகள் ரெயிலில் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்து இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்த போது தென்காசியை சேர்ந்த முருகன் மற்றும் சாகுல் ஹமீது என்பது தெரியவந்தது.

    இருவரும் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 29.200 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த ரெயில்வே காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பொருளுக்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவர் மற்றும் வெள்ளி பொருட்களையும் மதுரை வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    பொருட்களை பறிமுதல் செய்த வணிகவரித்துறை அதிகாரிகள் அவரிகளிடம் நடத்திய விசாரணையில் உரிய பில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுமார் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 928 அபராதம் வித்துள்ளனர். அபராத தொகையை செலுத்தியதை தொடர்ந்து பொருட்களை விடுவித்தனர்.

    • வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.
    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது.

    இது தவிர வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன. ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.

    அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன. அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது.

    கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் 3 பறக்கும் படையினர் மற்றும் எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.

    2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.

    லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

    ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
    • சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கோவில்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதற்கான ஆவணங்ளை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
    • மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நாயனகோளி செக்போஸ்ட் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் 1100 பீர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.77 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.

    • திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமலானது. தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 428 பணத்தை பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 471 மதிப்பிலான பொருட்களையும், மது மற்றும் போதைப்பொருட்கள் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், டி.வி., பாத்திரங்கள், சால்வை, அரிசி, வேட்டி, சேலைகள், டி-சர்ட்டுகள், பனியன்கள் உள்பட ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 170 மதிப்பிலும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட்டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×